சசிகலாவைச் சந்தித்த ஆளுநர்
|
சசிகலா |
|
ஆளுநர் |
சசிகலாவைச் சந்தித்த ஆளுநர், அவரிடம் நடத்திய உரையாடல், மிகுந்த காரசாரமாக இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கருத்துக் கூறிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், "ஆளுநர் அறைக்குள் சசிகலா நுழையும்போதே மிகுந்த இறுக்கத்துடன்தான் முகத்தை வைத்திருந்தார். முதல் 2 நிமிடம் இருவருக்குள்ளும் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. பின்னர் மெல்லிய குரலில் சசிகலா பேச ஆரம்பிக்க, அதை டி.டி.வி தினகரன் மொழிபெயர்த்து ஆளுநரிடம் கூறியுள்ளார். 'ஆட்சி அமைப்பதற்குத் தேவையான எம். எல்.ஏ-க்கள் ஆதரவு எனக்கு உள்ளது. அதனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தி ஆட்சியமைக்க அனுமதியளிக்க வேண்டும்' என்று சசிகலா கோரினார். அதற்குப் பதிலளித்த ஆளுநர், 'என் அனுமதி இல்லாமல் பதவியேற்பு விழா ஏற்பாடுகளை செய்தீர்கள். முதலமைச்சரை மிரட்டி நீங்கள் கடிதம் வாங்கியதாக புகார் கூறியிருக்கிறார். உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ-க்கள் எங்கே? அவர்கள் தொகுதி மக்களைப் பார்க்காமல் ஓ.எம்.ஆர் சாலையில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே அவர்கள் ஆலோசனை நடத்த வேண்டும் என்றால் சட்டமன்ற விடுதியில் நடத்தலாமே. 129 எம்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டதாக மீடியாக்களில் செய்திகள் வருகின்றன. அவர்கள் சுதந்திரமாக உங்களை ஆதரிக்கிறார்கள் என்றால், அவர்கள் தொகுதியிலோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலோ தங்கி இருக்கலாமே. ஏன், இரண்டு நாட்கள் எங்கோ ஒரு விடுதியில் சென்று இருக்க வேண்டும்' என கோபமாகக் கேட்க, எந்தப்பதிலும் சொல்லாமல் அமைதியாக உட்காந்து இருந்தார் சசிகலா. இதையடுத்து 5 நிமிடம்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 'யாரையும் அடைச்சு வைக்கல. நீங்கள் கேட்டுக் கொண்டால், இப்பவே ஆளுநர் மாளிகைக்கு கூட்டிட்டு வருகிறோம்' என்று சொன்னதும், 'ஆளுநர் இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட்டி வந்து பலத்தைக் காட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. நீங்கள் உங்கள் பலத்தை சட்டமன்றத்தில் நிரூபியுங்கள். மற்ற விஷயங்களை நான் ஆலோசித்து விட்டு சொல்கிறேன். இப்போ நீங்க கிளம்பலாம்' என்று கூறியிருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளார் சசிகலா" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment