Pages

Header

Saturday, February 11, 2017

ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கு பெரிதாக என்ன வேறுபாடு





ஜெயலலிதா & சசிகலா



                                             ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கு பெரிதாக என்ன வேறுபாடு என்று தெரியவில்லை, அரசியல் சிந்தனைகள் அற்ற அதிகாரம் மற்றும் பொருள் சார்ந்த உளவியல் கொண்டு இயங்கிய காலத்தில் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட விருப்புகளின் வெளிப்பாடாக அரசியலுக்குள் அழைத்து வரப்பட்டவர் ஜெயா, சசிகலா, ஜெயாவின் தனிப்பட்ட கேளிக்கை விருப்பங்களுக்காக அவரோடு இணைந்தவர்.

காலப்போக்கில் ஜெயாவின் அதிகாரபூர்வமற்ற தனிச் செயலர் ஆனார், பிறகு உயிருக்குயிரான தோழி ஆனார், உடன் பிறவாச் சகோதரி ஆனார், பொதுவில் இருவருக்கும் மக்களரசியல் குறித்த பரந்துபட்ட அறிவெல்லாம் கிடையவே கிடையாது. பதவிகளால் கிடைக்கிற அதிகாரமும், எளிதாக ஈட்ட முடிகிற பொருளும், பகட்டான வாழ்க்கையும் மட்டுமே அவர்கள் அரசியலுக்குள் இருக்கும்படி தூண்டிய காரணிகள்.

கடந்த 20 ஆண்டுகளாக எந்தக் கூச்சமும் இல்லாமல் ஜெயாவின் அரசியலை மக்கள் சகித்துக் கொண்டதற்கு மூன்று மிக முக்கியமான காரணங்கள் இருந்தன, முதலாவது, முழுமையான பார்ப்பனீய வலையமைப்புக் கொண்ட தமிழக ஊடகங்களிடம் அவருக்கு இருந்த இதயப்பூர்வமான ஆதரவு, இரண்டாவது வசீகரமான திரைக் கவர்ச்சியோடு இணைத்துப் பார்க்கப்பட்ட அவரது புறத் தோற்றம், மூன்றாவது பரிவுணர்வைத் தூண்டும் வகையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னால் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள்.

ஏறத்தாழ ஒரு திட்டமிடப்பட்ட வணிகமாகவே ஆட்சி அதிகார அரசியலை ஜெயலலிதா கையாண்டார், .தி.மு. என்கிற மக்கள் செல்வாக்கு மிகுந்த நிறுவனத்தை நான்கு அடுக்குகளாக்கினார், முதலாவது அடுக்கில் ஜெயாவும், சசிகலா & கோவும் மட்டுமே நிரந்தரமாக இருந்தார்கள், இரண்டாவது அடுக்கில் சுற்று முறையில் அமைச்சர்கள் இருந்தார்கள், முன்றாம் அடுக்கில் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட அளவிலான தலைவர்கள் துவங்கி கிளைக்கழக அமைப்பாளர்கள் வரையில் இடம் பெற்றார்கள், மிக முக்கியமான நான்காம் அடுக்கில் .தி.மு. உறுப்பினர்களும், ஜெயாவின் நிரந்தர வாக்காளர்களும் இருந்தார்கள்.

இந்த அமைப்பில் முதல் அடுக்கைத் தவிர்த்து ஏனைய மூன்று அடுக்குகளும் ஒன்றை ஒன்று சார்ந்து இணக்கமாகச் செயல்பட்டன, முதல் அடுக்கில் இருந்து பல்வேறு இலவசத் திட்டங்கள், நேரடிப் பயன்பாட்டு முறைகள் மூலமாக ஜெயா .தி.மு. என்கிற பொன்முட்டை இடுகிற நிறுவனத்தை அதன் அடிப்படை உறுப்பினர் கட்டமைப்பை இடையூறுகள் இல்லாமல் காப்பாற்றினார்.

நிரந்தரமான மக்கள் செல்வாக்கை ஈட்டக்கூடிய எவரையும் அமைச்சராகவோ, இரண்டாம் நிலைத் தலைவராகவோ அவர் எப்போதும் யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த அடுக்கு முறை அரசியல் வணிகத் திட்ட வரைவை மிகச் சிறப்பாகத் திரை மறைவில் நிகழ்த்தியவர் சாட்சாத் சசிகளாவே தான். இந்த அடுக்கு முறையில் வழங்கல் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது, இந்தச் சங்கிலி உடையாதபடி பார்த்துக் கொண்டதையே ஜெயாவின் ஆளுமைத் திறன் என்று தமிழக ஊடகங்கள் அவரது வாழ்வின் கடைசி நாள் வரை எழுதித் தீர்த்தன.

தி.மு..வுக்கும், .தி.மு..வுக்கும் இந்த அடுக்கமைப்பு முறையில் சில வேறுபாடுகள் உண்டு, முதல் அடுக்கில் கலைஞர் அல்லது அவரது குடும்பத்தினர் யாராவது இருந்தார்கள், நிரந்தரமான இரண்டாம் அடுக்குத் தலைவர்கள் இருந்தார்கள், மூன்றாம் மற்றும் நான்காம் அடுக்குகளில் பெரிய அளவில் மாற்றமில்லை, ஆனால், அதிமுகவில் இருந்த வழங்கல் மற்றும் பரிமாற்ற முறைக் கச்சிதம், தி.மு..வில் ஒருபோதும் இல்லை.

தி.மு..வின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்குகள் தனித்தன்மையோடு செயல்பட்டன, சில இடங்களில் மக்களோடு நெருக்கம் கொண்டதாகவும், பல இடங்களில் தலைமையோடு நெருக்கம் கொண்டதாகவும் இயங்கிய இந்த அடுக்குகள் பரிமாற்றச் சங்கிலி முறையில் செயல்பட்ட அரசியல் வணிகத் திட்ட வரைவுச் சங்கிலியை உடைத்தன, நான்காம் அடுக்கின் வழங்கலில் நிகழ்ந்த குளறுபடிகள் தொடர்ந்து தி.மு. வின் வாக்கு வங்கியை கூட்டுவதும் குறைப்பதுமாக இருந்தன, மயிரிழை விழுக்காடுகளில் பல முறை தேர்தல்களில் தி.மு. தோல்வியடைய இந்தச் சங்கிலிப் பரிமாற்றத் திட்ட வரைவைப் பாதுகாக்கும் உறுதியான முதல் மற்றும் இரண்டாம் அடுக்குத் தலைவர்கள் இல்லாததே முதற் காரணம்.

ஆக, வணிக நிறுவனமான .தி.மு. வுக்கு சசிகலா தலைமையேற்றால், அவருக்கு மிகவும் பழக்கமான இந்தத் திட்ட வரைவின் சாயலில் வெற்றிகரமாக ஆட்சியையும், கட்சியையும் நடத்த முடியும், சொல்லப் போனால், ஜெயாவை விட மிகச் சிறப்பாகக் கொள்ளையடிக்க முடியும், பரிமாற்றச் சங்கிலியைப் பாதுகாக்க முடியும், நடராஜனின் பரந்துபட்ட தலைவர்களுடான நெருக்கமும், செல்வாக்கும் அரசியல் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக வைத்துக் கொள்ள உதவலாம்.

.பி.எஸ்ஸின் எதிர்ப்புக் குரலைக் கேட்டவுடன், அவர் தமிழகத்தைக் காக்க வந்த காவல் தெய்வம் போல சிலர் குரல் எழுப்பியபடி இருப்பது நகைச்சுவை மட்டுமல்ல ஆபத்தான நிலையும் கூட, .பி.எஸ் ஸின் இந்த எதிர் நிலைப்பாட்டுக்குப் பின்னால் உறுதியான பார்ப்பனீயத் தலையீடு இருப்பதை மறுக்கவோ, மறைக்கவோ இயலாது, மேலும் .பி.எஸ் ஒன்றும் கறை படியாத கரங்களோடு பொது வாழ்க்கையில் இருப்பவர் அல்ல.

மணற்கொள்ளை, அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் என்று அம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் மிக முக்கியமான கலெக்சன் ஏஜென்ட்டாக, தமிழக மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொள்ளையடித்தவர்களின் பட்டியலில் முதல் வரிசையில் இருப்பவர், அடிமைத்தனத்தின் சின்னமாக, சுய அறிவைக் கடைசி வரை பயன்படுத்தாத அரசியலின் அவமானச் சின்னமாக இருந்து, அதிகார அரசியல் சுகங்களை இழக்க விரும்பாமல் பார்ப்பனீயத்தின் பகடையாக மாறி இருக்கும் .பி.எஸ், சசிகலாவுக்கு எந்த வகையியலும் குறையற்ற தீமைகள் நிறைந்தவர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்காமல், சாதி சார்ந்த, பொருளீட்டல் சார்ந்த, சுயநலன்கள் நிரம்பிய வாழ்க்கை முறையை ஆராதிக்கும் மனநிலைக்குச் சென்ற தமிழ்ச் சமூக அமைப்பும், இயங்கியலும் இன்றைய அரசியல் அவலங்களுக்கு மிக முக்கியக் காரணம்.

திராவிடக் கட்சிகளால், குறிப்பாகத் தி.மு..வால் அதன் திராவிடக் கருத்தாக்க அரசியலால் இங்கு நிகழ்ந்த பல்வேறு நன்மைகளுக்கும், வளர்ச்சிகளுக்கும் ஊடாக மழுங்கடிக்கப்பட்ட அரசியல் மற்றும் சமூக அறம் குறித்தும் நாம் இந்த நேரத்தில் பேசியாக வேண்டும், ஏறத்தாழ இரண்டு ஒற்றைத் தலைமைப் புள்ளிகள் தங்கள் உள்ளீடுகளை இழந்து மெல்ல மெல்ல மங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் ஒரு புதிய, அறம் சார்ந்த அரசியலை நோக்கி நாம் நகர்ந்தாக வேண்டும்.

ஜெயலலிதா, கலைஞர், .பி.எஸ், சசிகலா, பார்ப்பனீயம், சாதிக்கட்டமைப்பு, மதவாத ஆதரவு மனநிலை என்று இங்கே கிளைத்துக் கிடைக்கும் அடையாளங்கள் எல்லாம் தமிழச் சமூகத்தின் கூட்டு மனசாட்சியால் உருவாக்கப்பட்ட விளைபொருட்கள், பொது மனித அறத்துக்கும், இத்தகைய அடையாளங்களுக்கும் எப்போதும் பிரிக்க இயலாத நெருங்கிய தொடர்பு உண்டு.

தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும், தன்னைச் சுற்றி இப்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளை தனது மனசாட்சியுடன் பொருத்திக் கொண்டு விமர்சனங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்போது ஒரு குற்றவுணர்வுடன் கூடிய அமைதி தமிழ்ச் சமூகத்தின் கூட்டு மனத்தில் நிலவும், அந்த அமைதியில் இருந்துதான் புதிய நவீன அரசியலை நம்மால் வென்றெடுக்க இயலும்.

No comments:

Post a Comment